அதை விட, உயரம்!
(சிறுகதை)
_தமிழ்க்கிறுக்கன்
கொஞ்சம் பழகினால், நாய் பாஷையை நாமும் கற்றுக் கொள்ளலாம்.
புதிய நபர்கள் என்றால், ஒரு மாதிரி மென்மையாக மிரட்டும் மொழியில் குரைத்து வரவேற்கும். முற்றிலும் மனசெல்லாம் அழுக்கானவர்கள் வந்தால் "இவனை நம்பவே நம்பாதே, இவன் புத்தி சரியில்லை !" என்று எச்சரிக்கை விடும்.
அந்த மனித மனங்களை படிக்கிற சக்தி நம்மை விட நாய்களுக்கு அதிகம்.
சமயங்களில் நாயோடு அம்மா பேசிக் கொண்டிருப்பாள்.நாயும் கூட புரிந்தது மாதிரி உடல் மொழி பேசும். இருவருக்கும் மொழி தேவையிருக்காது.ஆனாலும் பேசிக் கொள்வார்கள்.
ஒரு நாள் அந்த நாய், கொஞ்சம் கோரமாக செத்து போனது.
அம்மா வெட்கத்தை விட்டு சப்தமாக அழவே ஆரம்பித்து விட்டாள்.
யாராவது நாய் செத்துப் போனதுக்கெல்லாம் அழுவார்களா?
அம்மாவின் கண்ணீர் பார்த்து நானும் கூட கலங்கித் தான் போனேன்.
அதற்கு பிறகு எவ்வளவு சொல்லியும் இன்னொரு நாய் வளர்க்க அம்மா மறுத்தாள்.
நகரங்களில் குடிப்பதற்கு ஒரு தண்ணீர், மற்ற உபயோகங்களுக்கு இன்னொரு தண்ணீர் என்று இரண்டு வகை தண்ணீர் பயன்படுத்துகிறார்கள்.
அம்மா ஒரு நாள் குடிநீரோடு மொட்டை மாடி போனாள்,நானும் பின் தொடர்ந்தேன்.
மொட்டை மாடியில் தானியங்களை கொத்தி தின்றபடி புதிய விருந்தாளிகள்,சிட்டுக் குருவிகள்.அவைகளின் கிண்ணத்தில் ஊற்றத் தான் தண்ணீர் கொண்டு போயிருக்கிறாள்,அம்மா.
வழக்கம் போல அம்மா, குருவிகளோடு பேச ஆரம்பித்து விட்டாள்.
என் வருகை அவர்களின் பேச்சுக்கு தடையாக இருக்கும் என்பதால், சப்தமில்லாமல் கீழே இறங்கி வந்து விட்டேன்.
அம்மா, பக்கத்து வீட்டின் மேல் நிறுத்தியிருந்த மொபைல் போன் சிக்னல் டவரை விட உயரமாக தெரிந்தாள்.
தட்டில் இரையோ, தண்ணீரோ தீர்ந்து போனால், குறைந்தது நான்கு குருவிகளாவது மொத்தமாக சேர்ந்து கீழே கதவு பக்கம் வந்து பயங்கரமாக கத்த ஆரம்பித்து விடும்.
"என்னடா செல்லம், பசிக்குதா " என்றபடி மொட்டை மாடி போய் தேவையானவைகளை நிரப்பி விட்டு கீழே வருவாள்.
ஒரு நாள் எல்லாம் அடங்கிப் போன அம்மாவை கிடத்தியிருந்தோம்.
அவ்வளவு கூட்டத்தையும் பார்த்து கொஞ்சம் கூட பயப்படவே இல்லை.
எல்லாம் புரிந்தது மாதிரி மெல்ல மெல்ல தத்தி தத்தி தாவியபடி அம்மா மேல் உட்கார்ந்ததன,குருவிகள்.
யாரும் தொந்தரவு செய்யாதீர்கள், அவைகளும் அம்மாவின் பிள்ளைகள் தான் என்றேன்.
யாரோ புதிதாக அழ ஆரம்பித்து விட்டார்கள்.
அந்த குருவிகளுக்கு யாரோ தீனி வைத்தார்கள். எந்த குருவியும் சீண்டவே இல்லை.
அம்மாவை அடக்கம் செய்த பிறகு மொட்டை மாடியில் , ஒரு வாரம் தீனியும், தண்ணீரும் வைத்துப் பார்த்தேன்.
எதுவும் குறையவே இல்லை.எந்த குருவியும் சீண்டவே இல்லை.
வெட்கமே இல்லாமல் சப்தமா அழ ஆரம்பித்தேன்...!
(சிறுகதை)
_தமிழ்க்கிறுக்கன்
No comments:
Post a Comment